Tuesday, November 4, 2008

எங்கும் தமிழ் எதிலும் தமிழ்

"பங்கு சந்தை பற்றிய உங்கள் வினாக்களுக்கு நான் விடையளிக்க தயாராக இருக்கறேன். உங்கள் வினாக்களுடன் என்னை தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி ********, கைபேசி எண் *******, மின்னஞ்சல் முகவரி *****@****.com".

யாரும் குழம்ப வேண்டாம். சமீபத்தில் மக்கள் தொலைக்காட்சியில் பங்கு சந்தை பற்றிய நிகழ்ச்சியில் நான் கேட்டவையே இது.

விஷயத்துக்கு வருவோம் கைபேசி, மின்னஞ்சல், மகிழுந்து, குளுகுளுப்பான், மாவரைப்பான், இசை தகடு, கொட்டை வடி நீர் இதெல்லாம் என்ன? முறையே செல்போன், ஈமெயில், கார், பிரிட்ஜ், கிரைண்டர், மியூசிக் சிடி, காபி என்பதின் தமிழாக்கமே மேலே நாம் கண்ட வார்த்தைகள்.

வேடிக்கையை பாருங்களேன், இதில் ஆங்கில வார்த்தைகள் பாமரனுக்கும் புரிவது போல உள்ளது, ஆனால் அதன் தமிழாக்கமோ ஏதோ பாவலருக்கு மட்டுமே புரிவது போல உள்ளது. "ஏன் இந்த கொலை வெறி" என்று வடிவேலு தோரணையில் கேட்கத் தூண்டுகிறது. ஆங்கிலத்தை தமிழாக்குவதையே வேலையாக கொண்டிருப்பவர்களுக்கு சில விஷயங்களை கூற விழைகிறேன்.

அதற்கு முன் நான் கொடுக்கும் உறுதி மொழி "நான் தமிழுக்கு எதிரானவன் இல்லை. தமிழ் மீது குன்றாத பற்றும், மரியாதையும் கொண்டவன்" என்பதுதான். இதனால் தான் நான் தமிழில் இந்த கட்டுரையை வரைந்து கொண்டு இருக்கிறேன்.

கண்டுபிடிப்புகள் இரண்டு விதம் -
1, இருக்கும் விஷயத்தை கண்டுபிடித்தல் - ஆங்கிலத்தில் டிஸ்கவரி. உதாரணத்திற்கு மஞ்சளில் மருத்துவ குணம் உள்ளது, புவி ஈர்ப்பு விசை.
2, இல்லாத ஒன்றை புதிதாக கண்டுபிடித்தல் - ஆங்கிலத்தில் இன்வெண்ஷன். உதாரணத்திற்கு டெலிபோன், செல்போன், கம்ப்யூட்டர்.

இங்கிலீஷ் போல தமிழும் ஒரு வேடிக்கையான மொழிதான். இங்கே கண்டுபிடிப்புகளை பிரித்து பார்ப்பதில்லை. ரேடியோவும் கண்டுபிடிப்புதான், பிரியாணியும் கண்டுபிடிப்புதான், ஏன் ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோலும் கண்டுபிடிப்புதான். அதனால்தான் என்னமோ தமிழன் தான் கண்டுபிடிக்காததுக்கு கூட தமிழ் பெயர் வைக்க முயற்சிக்கிறான்.

என்னை பொறுத்த வரையில் டிஸ்கவரிக்கு தமிழில் பெயர் வைத்து கொள்ளலாம் ஆனால் இன்வெண்ஷன்க்கு தமிழ் பெயர் வைத்து அழைப்பதை தவிர்க்க வேண்டும். அதேபோல நமது கண்டு பிடிப்புகளை ஆங்கிலத்தில் அழைப்பதையும் நாம் தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கு நாம் எதாவது முதலில் கண்டு பிடிக்க வேண்டும் என்று நீங்கள் கூறுவது எனக்கு கேட்கிறது.

விஷயம் இவ்வளவுதான் உங்கள் பெயர் 'அன்புமணி' என்று வைத்துக்கொள்ளுங்கள், எனக்கு தாய் மொழி தெலுங்கு என்பதற்காக உங்களை நான் 'பிரேமலு கண்டாலோ' என்று கூப்பிட முடியாது. அதேபோல் ஆல்பர்ட்டை ஆளவந்தான் என்று நான் அழைக்க கூடாது. ஏனென்றால் அது ஒரு பெயர், அதேபோல்தான் டெலிபோனும், சைக்கிளும். ஒரு படைப்பாளியின் படைப்புக்கு நாம் தரும் மரியாதையே அவர் வைத்த பெயரை வைத்து அந்த படைப்பை அழைப்பதுதான்.

டிஸ்கவரிக்கு வருவோம். எல்லா டிஸ்கவரிக்கும் தமிழ் பெயர் சூட்ட முடியாது, அது ஒத்தும் வராது. சென்னையில் படிக்கும் சிறார்கள் gravitation force, keyboard, friction என்று படித்து கொண்டிருக்க அங்கே தமிழ் பள்ளியில் புவி ஈர்ப்பு விசை, விசை பலகை, உராய்வு என்று சொல்லி கொடுத்தால் அவர்களுக்கு குழப்பமே மிஞ்சும். எனென்றால் அவர்களும் ஒரு காலகட்டத்தில் அங்கில பள்ளி மாணவர்களுடம் போட்டி போட வேண்டியது வரும். என்னதான் அறிவாளிகளாக இருந்தாலும் அந்த காலகட்டத்தில் அவர்களுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை வருவதை தவிர்க்க முடியாது. நானும் ஒரு தமிழ் பள்ளியை சேர்ந்தவன் என்பதால் சொல்கிறேன். இது எனக்கு நடந்து உள்ளது.

ஆங்கிலம் ஒரு கலப்பு மொழி. பல மொழிகளில் இருந்து தழுவி வந்த மொழியாகும். தமிழ் ஒரு தொன்மையான மொழியாகும், இன்று செம்மொழி அந்தஸ்தும் அதற்கு உள்ளது. அதற்காக பார்க்கும் பொருட்களுக்கு எல்லாம் தமிழில் பெயர் வைக்க முடியாது. எப்படி டெலிபோன் தமிழுக்கு புது வார்த்தையோ அதே போல தொலைபேசியும் புது வார்த்தைதான். இதை நாம் கவனத்தில் வைத்து கொள்வது நன்று. ஆங்கில வார்த்தைகள் உபயோகிப்பதை தயவு செய்து ஒரு மொழி துரோகமாக பார்க்காதீர்கள்.

தமிழை அழிக்க முடியாது. குமுதமும், ஆனந்த விகடனும் முன்னைவிட அதிகமாக தான் விற்று வருகின்றன. மும்பை பதுமைகள் எல்லாம் தமிழ் சினிமாவில்தான் அதிகம் குழுமி இருக்கிறார்கள். ஜோதிகாகொட இப்போது தமிழ் பெண்தானே (சிரிக்க வேண்டாம் நான் சீரியசாகதான் சொல்கிறேன்). தமிழாக்கம் என்ற பெயரில் தமிழை கலப்படம் செய்ய படுவதை நாம் நிருத்திக்கொல்லலாம் என்பதே என் கருத்தாகும். நம்புங்கள் bus stand, railway station, auto, computer, laptop இவைகளெல்லாம் நாம் மிக சரளமாக பயன்படுத்தும் வார்த்தைகள். சும்மா பகட்டுக்காக தமிழ் வளர்கிறேன் பேர்வழி என்று இவற்றை தமிழாக்கம் ஏன் செய்வானேன்?

கொட்டை வடி நீர் - எனக்கு சிரிப்பு தான் வருகிறது. இதை கண்டு பிடித்து யாரோ? கேட்டு சொல்லுங்களேன்.

-- தவிடு

4 comments:

aamaran said...

இதுவும் நல்லா தான் இருக்கு. நல்லா யோசிக்கிறீங்க, பாராட்டுக்கள்.

Sakthi said...
This comment has been removed by the author.
Sakthi said...

எனக்கு பிரபல திண்டுக்கல் ஐ.லியோனியின் நகைச்சுவை ஒன்று நினைவுக்கு வருகிறது.

ஒருவர்: பெரியவரே இங்கே பேருந்து நிலையம் எங்கே இருக்கிறது.

பெரியவர்: அப்படின்னா, அப்படி இங்கே எதுவும் கிடையாதுப்பா.

அவரே: அதாங்க பஸ் ஸ்டாண்டு எங்கே இருக்குன்னு கேட்டேன்.

பெரியவர்: ஆங்... அப்படி தமிழ்ல கேளு. ஸ்ட்ரெய்ட்டா போயி ரைட்ல திரும்பு.

தமிழின் இன்றைய நிலைமையை லியோனி கையாண்டது இந்த விதத்தில் என்றால் நீங்களும் மெலிதான நகைச்சுவையோடு சேர்ந்து சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது.

Unknown said...

Really nice Article. Keep posting. really interested.
Mr.47