Monday, November 17, 2008

வாரணம் ஆயிரம் - விமர்சனம்

நேர்மையாக சொல்கிறேன். நான் இங்கே இந்த படத்தின் உள்ள குறைகளை மட்டுமே பேச 
போகிறேன். நேரமிருந்தால் நிறைகளை கொஞ்சம் சொல்கிறேன்.படத்தின் முதல் காட்சியிலேயே
சூர்யா.. கிழ சூர்யா. கொஞ்சம் உற்று பார்த்தால் முகத்தில் மட்டும்தான் சுருக்கம். கைகள் 
எல்லாம் நன்றாக தெனவெடுத்த சிக்ஸ் பேக் சூர்யா வின் கை போன்று தான் உள்ளது. 

வயசான சிம்ரன் சாபிடுவது போன்ற ஒரு சீன். அந்தக் காட்சியை எடுப்பதற்கு முன் வெகு நேரம் 
சிம்ரன் பசியில் இருந்திருக்க வேண்டும். ஏன் இப்பிட் அவக் அவக் என்று சாப்பிடுகிறாரோ தெரியவில்லை. 
வயதான தோற்றத்திற்கும் அவர் சாப்பிடும் தோரனைக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லை.   

படத்தில் எண்பதுகளில் நடப்பது போன்ற சில காட்சிகளும் உள்ளன. அதுதான் இருப்பதிலேயே 
கொடுமைடா சாமி. அதற்கு தேவையான பொருட்களையெல்லாம் அவசர அவசரமாக எதோ 
கண்காட்சி அல்லது பொருட்காட்சியில் இருந்து எடுத்து வந்திருக்கிறார் போலும். அதே போல் 
சிம்ரன் முக சுருக்கங்களையும் கவனிக்க தவறி விட்டனர். அவசரமான மேக்கப். பழைய 
காலத்தில் ஸ்பென்சர் கம்பெனியின் முன்னால் நடந்து வருவதைப் போன்ற ஒரு காட்சி. அதில் 
பில்டிங் உயரத்திற்கே ஆட்களும் இருக்கிறார்கள். கொஞ்சம் கூட லாஜிக் இல்லை. ஒன்றிரண்டு 
விநாடிகள் மட்டும் வருவதால் அநேகம் பேர் அதனை கவனித்து இருக்க மாட்டர்கள். மட்டமான 
கிராபிக்ஸ். சிம்ரன் முகத்தில், நெற்றியில் ஒரே ஒரு கோடு குறுக்கு வாட்டில் வரைந்து வைத்து 
வயதான தோற்றம் என்று சொல்கிறார்கள். புருவத்திற்கும் தலைக்கும் கொஞ்சம் வெள்ளை கலர் 
அடித்து விட்டு லைட்டாக தொப்பைக்கு துணியையும் வைத்து கிழ சூர்யா என்கிறார்கள். மேக்கப் 
மேனுக்கு என்ன அவசரமோ.   

கிழ சூர்யா யாரையாவது பார்த்துவிட்டு திரும்பும்போது பேரழகனில் வரும் அதே லுக் கண்களில் 
வருகிறது. கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம்.  ஒரு நான்கைந்து வெவ்வேறு படங்களை பார்ப்பது 
போன்ற உணர்வு. சூர்யா சென்னை. சூர்யா அமெரிக்கா, சூர்யா திவ்யா, அப்புறம் சூர்யாவும் 
அந்த பொம்பளை போலீஸ் மாதிரி இருக்கே, ட்ரெயின்ல பாத்த அந்த பொண்ணு. அவங்க காதல், 
சூர்யா போதை அடிமை, சூர்யா ஸ்ரீ நகர், சூர்யா ராணுவ வீரன். இதில் திவ்யா அவரை பதினைந்து 
வயதில் இருந்தே காதலித்துக்கொண்டு இருந்ததாம்.  இப்படி நிறைய படங்கள். ஹா...வ்...  படத்தில் 
எல்லாருடைய டயலாக் டெலிவரி ஸ்டைலும் ஒரே மாதிரி இருக்கிறது. அதாவது மாடுலேசன். 
வார்த்தை வார்த்தையாய் பேசுகிறார்கள். அது நான்.. போனேன்... காதல்... டாடி டாடி... சாம்பிராணி... 
சூர்யா... திரும்பி வந்துடு... என்று ஆளை விடுங்கப்பா...

போதாக்குறைக்கு கௌதம் மேனனே பத்தில் ஏழு பேருக்கு டப்பிங் கொடுத்திருப்பது வேறு...  
படத்தின் மிகப்பெரிய குறை அதிகமான ஆங்கில வசனங்கள். ஹிந்தி வசனங்கள். பி, சி சென்டர் 
பற்றி கவலையே படவில்லை போல. ஆனால் ஒரு படத்தின் தலைஎழுத்து இந்த செண்டர்களில்தான் 
நிர்ணயிக்கப்படுகிறது என்பதை டைரடக்கர் (ஸ்பெல்லிங் மிஸ்டேக் எல்லாம் இல்லை.. 
நானேதான் அப்படி எழுதினேன்) எப்பொழுது உணர்ந்து கொள்வாரோ. படத்தின் பெயர் மட்டும் தான் 
தமிழில். (இதற்கு வரிவிலக்கே கொடுத்திருக்க கூடாது. குறைந்த பட்சம் 75  சதவீத டயலாக்குகலாவ்து தமிழில் 
இருக்க வேண்டும், அப்போதுதான் வரிவிலக்கு என்று திருத்தம் செய்ய வேண்டும்)  இந்த 
படத்திற்கு பெண்கள் கூட்டம் தான் நிறைய வரும். எனேன்றால் படம் ஒரு மினி நெடுந்தொடர் போல 
உள்ளது. குறைகள் இன்னும் நிறைய இருக்கிறது.   இந்த படத்தின் திரைக்கதை எந்த படத்தினுடைய தாக்கத்தை 
கொண்டுள்ளது என்பதை சினிமாவைப் பற்றி அறிந்தவர்கள் தெரிந்திருப்பார்கள். கமல்ஹாசனை போல் 
திரைக்கதை அமைக்க இன்னொருவர் பிறந்து தான் வர வேண்டும்.   

ம்ம். நிறைகளா... ... சூர்யா அழகாக இருக்கிறார். எனக்கு அருகில் உட்கார்ந்து படம் பார்த்துகொண்டிருந்த  
பாட்டி சொன்னது "இவன் எவ்வளவு அழகா இருக்கான்!". அப்புறம் டைரக்டர் கௌதம் மேனன் 
தனது பெர்சனல் வாழ்க்கையில் ஒவ்வொரு  விஷயத்தையுமே ரசித்துக்கொண்டே இருப்பார் போல. 
ஏனெனில் அவர்களைப் போன்றவர்களால் தான் படத்தில் வரும் சில காட்சிகளை எடுக்க முடியும். 
ஸ்ரீ நகரில் ஒரு வீட்டில், சுட சுட தேநீர்... படகு சவாரி, பனிமலைகள், பச்சை புல்வெளிகளில் படுத்து 
உருள்வது, அப்புறம் சில இடங்கள்.... பாடல்கள் சில அருமை. வரிகளும் அற்புதம். 

படம் முடிந்து வெளியே வந்ததும் பின்வரும் சில மாற்றங்களை நீங்கள் உணரக்கூடும்.
1. உள்ளே செல்லும் பொது நீங்கள் பார்த்த நாய் வெளியே வரும்போது பெரியதாக வயதாகி இருக்கும்.  
2. உள்ளே செல்லும் பொது பாதி வளர்ந்திருந்த கட்டிடங்கள் ஏதேனும் இருந்தால் வெளியே வரும் 
பொது அது முழுமையடைந்து பயன்பாட்டிருக்கு வந்து கொஞ்சம் அழுக்கும் ஏறியிருக்கும்.  
3. உங்கள் தாத்தாவோ பாட்டியோ மண்டையை போட்டிருப்பார்கள்.  
4. எச்சரிக்கை. கண்ணாடியில் உங்களை நீங்களே பார்க்கும்பொழுது அடையாளம்   கண்டுபுடிக்க முடியாது.  
5. இன்ன பிறவற்றை எச்சரிக்கை உணர்வு கொண்டு நிறுத்திக்கொள்கிறேன்.  
6. மொத்தத்தில் கண்டிப்பாக உங்களுக்கு ஒரு ஆறேழு வயது அதிகமாகியிருக்கும்.  
7. இருந்தாலும் அப்பானா இவர மாதிரிதான் இருக்கணும்னு எல்லா இளைஞர்களையும் நினைக்க 
வைப்பதே இந்த படத்தின் வெற்றி.  
8. மொத்தத்தில் வாரணம் ஆயிரம் - கொட்டாவி.   

ம்ம்.. எது எப்டி இருந்த என்ன, லைஃப் ஹேஸ் டு கோ.
-- புண்ணாக்கு

Friday, November 7, 2008

ரஜினி - சரித்திரமா சகாப்தமா ?

அவர் ஒரு சுமாரான நடிகர் அவ்வளவுதான். என் அறிவிக்கு எட்டிய வரை அவரால் மோகன் (என்று ஒரு நடிகர் இருக்கிறார்) அளவு கூட நடிக்க முடியாது என்பதுதான் என் கருத்து. அதே சமயம் அவரைப் போல ஸ்டைல் பண்ணுவதற்கு எத்தனை ஆயிரம் மோகன்கள் வந்தாலும் முடியாது. ஆனால் ஸ்டைல் மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்.

எது வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று இந்த உலகிற்கு நிரூபித்து உள்ளார். உதாரணத்திற்கு சில கீழே.
1. குறைந்த பட்சம் ஒரு தமிழனையாவது தலைவரின் அடுத்த படம் எப்போது என்று ஏங்க வைக்க முடியும்.
2. குறைந்த பட்சம் ஒரு டஜன் தமிழர்களையாவது தலையை அங்கிட்டும் இங்கிட்டும் செறைத்துக்கொண்டு நடுவில் மட்டும் V வடிவில் முடியை பப்பறக்க என்று பறக்க வைக்க செய்ய முடியும். கேட்டால் ரஜினி ஸ்டைல் என்று அவர்கள் பெருமை கொள்ளும் கண்றாவியையும் காண நேரிடும்.
3. ஒட்டு மொத்த தமிழ்நாட்டையும் தன் படத்தின் முதல் நாளன்று திரும்பி பார்க்க வைக்க முடியும். திரும்பி பார்ப்பவனுக்கு சோத்துக்கு வழி இருக்கிறதோ இல்லையோ அது வேற கதை.
4. அவரைப் பற்றிய செய்தியை படிக்கும் உலகின் எந்த நாட்டுக்காரனையும் நன்றாக குழ்ப்பி வைக்க முடியும்.
5. தன்னை ஒரு ஆன்மிகவாதி என்று தமிழ்நாட்டை நம்ப வைக்க முடியும். (பாபா படம் வரும் வரையிலும்)
6. பேசுறதை எல்லாம் பேசி நல்லா கல்லா கட்டிட்டு கடைசில அது எவனோ எழுதிக்கொடுத்த டயலாக் நான் படத்திற்காக பேசினேன் என்று சொல்லிவிட்டு கூலாக அமேரிக்கா சென்று ஐஸ்வர்யாவுடன் டூயட் பாட முடியும். (கருமம்,.. அந்த பொண்ணு எத்தனையோ தடவை சொல்லிடுச்சு, என்னால ரஜினி கூடலாம் நடிக்க முடியாதுனு, ஆனா விட்டாரா நம்ம ஆளு. )

இவை எல்லாமே ஒரு சில துளிகள் தான்.

இப்பொழுது ஏன் இந்த கட்டுரை எழுத வேண்டிய அவசியம் என்று கேட்கலாம். சொல்கிறேன்.

சமீபத்தில் அவருடைய பேட்டி (கேள்வி-பதில்) படிக்க நேர்ந்தது. அதில் ஏதோ ஒரு அரசியல் பற்றிய கேள்விக்கு அவர் சொன்ன பதில் "... கடவுள் சொன்னால் நாளைக்கே நான் தயார்!". இன்னும் எத்தனை நாளைக்குதான் இதையே சொல்வாரோ. ஆண்டவா. கடவுளுக்கே கோவம் வந்திருக்கும். என்ன செய்ய...

சரி, கடவுள் எப்படி வந்து சொல்வார். இந்த சினிமாத்தனமான கற்பனைகளை விட்டுவிட்டு யோசியுங்கள். அதாவது "புஸ் ..." நு புகையா வந்து அதுல இருந்து கடவுள் வெளில வந்து இவரிடம் சொல்வார் அல்லது நந்தனம் சிக்னல் ல ஒரு பிச்சைக்காரி வடிவில் வந்து சூசகமாக சொல்லிவிட்டு போவார் என்றோ நினைக்காதீர்கள்.

உண்மை என்ன தெரியுமா... இவர் கடவுள் பெயரை சொல்லி தப்பிக்கிறார் அல்லது தாமதப்படுத்துகிறார். என்றைக்காவது அரசியல் பற்றிய முடிவு வரும்பொழுது கடவுள் சொல்லிவிட்டார் என்று அப்போதும் ஒரு புருடா விடுவார். அதற்கு ஆன்மிக புத்தகம் ஏதாவது ஒன்றில் இருந்து இத்தனையாம் பக்கத்தில் இது இது சொல்லப்பட்டிருக்கிறது அதுபோல் தனக்கு நடந்தது, நான் யானை அல்ல குதிரை என்றும் சொல்வார்.

சரி இதெல்லாம் பொது வாழ்க்கை என்று வந்துவிட்டால் சகஜம் என்று போய்விடலாம். சினிமாவிற்கே வருவோம். ஏய்... யாருப்பா அது அங்க கமலையும் ரஜினியையும் பத்தி பேசுறது. ஆ.. அதேதான் மேட்டர்.

கரக்ட்... ஏம்பா இந்த ரஜினியையும் கமலையும் கம்பேர் பண்றீங்க. (நான் கமல் ரசிகன் கிடையாது) கமல் ஒரு சுத்தமான அறிவு ஜீவி. மனசுக்கு பட்டதை குழப்பமில்லாமல் தெளிவாக சொல்லிவிடுவார். அரசியலுக்கு வருவீர்களா மாட்டீர்களா என்ற கேள்விக்கு அவர் சொன்ன பதில் "எனக்கு நடிக்க தெரியும், ஆனா அந்த அளவுக்கெல்லாம் நடிக்க தெரியாது..." என்று சொல்லிவிட்டார். அதன் பிறகு ஒருத்தன் கூட அவரிடம் போய் அரசியல் பற்றிய கேள்வியே கேட்கலை. ஆனால் ரஜினியின் நிலைமை என்ன. ?

கமல் சினிமாவை ஒரு வியாபாரம், பொழுதுபோக்குகும் அப்பாற்பட்டு அதனை கலையாக அல்லது வாழ்க்கையாக பார்த்தார். அவரது ஒவ்வொரு படமுமே வாழ்க்கையின் பிரதிபலிப்புத்தான். ரசிகனுக்கு பிடிக்கவில்லை என்று தனது என்று பாணியை மாற்றிக்கொள்ளவில்லை. ஏனெனில் ரசிகர்கள் ஒரு வித்தியாசமான பிறவிகள். (கவனிக்கவும் திரையரங்குக்கு வரும் அனைவருமே சினிமா ரசிகர்கள் கிடையாது. அவர்களில் கமல் ரசிகர்கள், ரஜினி ரசிகர்கள், சினிமா ரசிகர்கள், போழுதுபோக்கிகள், வெறும் பார்வையாளர்கள் என்று அனைத்து வகையினரும் உண்டு.) நான் இங்கு பார்வையாளர்களை பற்றி மட்டுமே பேசுகிறேன்.

ஆ... எங்கே விட்டோம். வித்தியாசமான பிறவிகள். அன்பே சிவம் படம் வெளிவந்த போதுதான் தூள் என்ற படமும் வந்தது. ஆனால் அன்பே சிவம் தோல்விப் படம். தூள் மாபெரும் வெற்றி. இரண்டு படங்களும் வந்து ஐந்தாறு வருடங்கள் ஆகிவிட்டன. அப்போது 'பார்வையாளர்க' ளிடம் கேட்டால் அன்பே சிவம் புரியவில்லை என்றார்கள். ஆனால் இப்போது அதே 'பார்வையாளர்க' ளிடம் கேட்டால் அன்பே சிவம் சிறந்த படம் என்பார்கள். ஆனால் சினிமா ரசிகர்கள் அப்போதே அந்த படத்தை சிறந்த படம் என்று சொல்லி விட்டார்கள்.

ஆனால் ரஜினி படத்தைப்பற்றி 'பார்வையாளர்க' ளிடம் கேட்டால் எப்பொழுது கேட்டாலும் ரஜினி படம் சூப்பர் ('பாபா' வைத்தவிர. அது ஏன் என்று கூட சில அறிவாளிகளுக்குத் தெரியாது) என்றுதான் சொல்வார்கள். சினிமா ரசிகர்களிடம் கேட்டு பாருங்கள்...??!! ஆனால் விதி என்று ஒன்று இருக்கிறதே!!! அது சினிமா ரசிகர்களின் எண்ணிக்கையை விட பார்வையாளர்களின் எண்ணிக்கையைத்தான் அதிகமாக வைத்திருக்கிறது.

இந்த கட்டுரையை ரஜினி ரசிகர்கள் யாரேனும் படித்து அவர்களுக்கு கோவம் வந்தால் அவர்கள் வெறும் அரைவேக்காடுகள். உள்ளதை உள்ள படியே ஏற்றுக்கொள்பவன் தான் உண்மையான ரசிகன். ரஜினி ரசிகன். சினிமா ரசிகன்.


-- புண்ணாக்கு

Wednesday, November 5, 2008

மன்மத கவி...

தனிமையில் இருக்கும் தலைவனும் தலைவியும், பேசிக்கொள்வதாய் மட்டுமே சித்தரித்த பாடல்கள் இப்பொழுது சினிமா பாடல்கள் முலம் புதிய பரிணாமத்தை எட்டியுள்ளன. தலைவனும் தலைவியும் பேசிக்கொண்டு மட்டுமா இருப்பார்கள், அடுத்தது என்ன என்பதை கையில் எடுத்துள்ளது சினிமா. உதாரணத்திற்கு,

"மன்மதன் அம்புகள் பாய்ந்திடும் வேளையில்
புண்படும் அல்லவா உன் மார்பிலே பொழியவா"

படித்துவிட்டீர்களா, சற்றே ஆசுவாசப்படுத்திக்கொள்ளுங்கள்...இப்பொழுது மறுபடியும் மேலே உள்ள பாடல் வரிகளை படியுங்கள். அப்படியே நீங்கள் இதற்கு முன் பார்த்த (பார்த்ததில்லை என்று கூற வேண்டாம்) ஏதாவது ஒரு முழு "நீல" வண்ணப்படத்தை நினைவு படுத்திக்கொள்ளுங்கள். வைரமுத்துவின் வைர வரிகள், காதல் வேட்டையாடி விளையாடியிருப்பது தெரியும். அவருக்கு நமது முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு இதே பாணியில் வந்த வேறு சில பாடல்களை அலசுவோமே. அடடே இது எந்த படத்தில் வந்த பாடல் என்று என்னை கேட்க்காதீர்கள். அதை கண்டு பிடிக்கும் பொறுப்பை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

"ஜீவனின் மையம் தேடி கைகள் மீண்டும் வருமா"

என்று கவிஞர் கூறும் போது, கிருஷ்ணசாமி போன்ற சிலருக்கு தோன்றுவதெல்லாம் "இதை வெள்ளைகாரங்க தானே பண்ணுவாங்க, இது தமிழர் பண்பாட்டில் இல்லாத ஒன்று" என்பது தான். அவரை பொறுத்த மட்டில் உதடோடு உதடு பதித்து முத்தம் கொடுப்பது தமிழ் பண்பாடில்லை. இதற்காக அவர் கமல்ஹாசனுடன் சண்டை கூட போட்டார். சரி சரி அரசியல் வேண்டாம், விஷயத்துக்கு வருவோம். மேற்கண்ட பாடல் வரிகளை நாம் ரசிகவே செய்கிறோம். உக்காந்து யோசிப்பார்களோ என்று அச்சர்யப்படுகிறோம்.


"என் உடல் பொருள் தந்தேன் சரண் புகுந்தேன்
என் உயிரை உனக்குள் ஊற்றி விட்டேன்"

அடடே இதை விட சிறந்த முறையில் தலைவன் தலைவி புனருவதை எடுத்து காட்ட முடியாது என்று நினைக்கும் வேளையில்,"ஏன் முடியாது? நான் வைரமுத்துக்கெல்லாம் சீனியர்" என்று கர்ஜிக்கிறார் வலிபக்கவிஞர் வாலி.

"ஒரு சின்ன பூத்திரியில் ஒலி சிந்தும் ராத்திரியில்

இந்த மெத்தைமேல் இளம் தத்தைக்கோர் புது வித்தை காட்டவா"

என்று தலைவன் கேட்க தலைவியோ

"ஒரு ஜன்னல் அங்கிருக்கு உன்னை எட்டி பார்ப்பதற்கு

அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டிட வா" என்கிறாள்.

கவித்துவமாக எழுதும் வாலி சில பல சமயங்களில் படு லோக்கலாகவும் எழுதி கைதட்டல் வாங்கிவிடுகிறார்.

"உரலு ஒன்னு அங்கேருக்கு 

உலக்கை ஒன்னு இங்கேருக்கு 

நெல்லு குத்த நேரமாச்சி 

சொல்லடி என் சித்திரமே" எனும் தலைவனுக்கு தலைவியின் பதில் 

"நெல்லு குத்த நேரம் இல்ல

பாவம் நீயும் வெடல பையன் 

நெல்லு குத்த இடம் கொடுத்தா

மாட்டிக்குவே உரலுக்குள்ளே" என்பதுதான்.

அதோடு நிற்கிறாரா, "மாட்டேன்னு சொன்னா சும்மாவா விடுவேள் மேடீனீ ஷோ கூப்பிடுவேள்"என்று பிராமன பாஷையில் கலக்கிவிடுகிறார்.

இரட்டை அர்த்த பாடல்களிலும் வாலிக்கு நிகர் வாலியே -

"கொல்லையில பொம்பளைங்க புடலங்காய்க்கு கல்ல கட்டுற ஊரு இது யம்மா யம்மா ஊரு இது,

'அட தொங்குகிற காய்க்கு' எல்லாம் கல்லை கட்ட முடியுமாடி யக்கா யக்கா"

என்று கொக்கரிக்கிறார். யக்காவா அடங்கொக்கமக்கா... jhonny walker உதவியுடன் பாட்டு எழுதுவாரோ, அப்படியே கற்பனை கொட்டுதே.

"மாங்காய் மாங்காய் ரெண்டு மாங்காய்
மார்கெட்டு போகாத குண்டு மாங்காய்"

இதில் உள்ள கருத்தாழத்தை பாருங்கள், மார்கெட்டு என்பதை நீங்கள் 'மார்' 'கெட்டு' என்று பிரித்து பாருங்கள், வாலியின் கவிநயம் புரியும். சற்றே விரசமாக இருந்தாலும் நம்மையும் அறியாமல் இதழோரத்தில் ஒரு சிறு புன்னகை எட்டி பார்த்து விடுகிறது. என்ன செய்வது, அது ஆண்களுக்கேயுள்ள "manufacturing defect".


"அங்கம் முழுதும்
பொங்கும் இளமை
இதம் பதமாய்த் தோன்ற,
அள்ளி அணைத்த கைகள்
கேட்க நினைத்தால் மறந்தாள்,
கேள்வி எழுமுன் விழுந்தாள்
என்ன உடலோ என்ன உறவோ"
என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். மேற்குறிப்பிட்ட பாடல்கள் அளவிற்கு வெளிப்படையாகவோ அல்லது இலை மறை காயாகவோ இல்லாவிட்டலும், பாடலை படத்தில் பார்க்கும் போது ம்ம்ம்... நினைவில் வரும் நடிகை ஸ்ரீதேவியை சற்று காத்திருக்க சொல்லிவிட்டு அடுத்த பத்திக்கு செல்லுங்கள்.


இளம் கவிஞர்களும் பின்னே இல்லை. அவர்கள் பங்குக்கு நல்ல நேர்த்தியான பாடல்கள் கொடுத்து கொண்டுதான் இருக்கிறார்கள். பாடல்களில் காதல் ரசம் சொட்டுகிறது.

"எனது ஊதடுகள்
ஊந்தன் மார்பில்
போகும் ஊர்வலங்கள்
நகங்கள் கீரியே
முதுகில் எங்கும்
நூறு ஓவியங்கள்" என்று தொடங்கும் பா விஜய் பின்பு

"எங்கு துவங்கி?
எங்கு முடிக்க?
எதனை விடுத்து?
எதனை எடுக்க?
என்ன செய்ய?
ஏது செய்ய?
உரச உரச ..."என்று அவரும் குழம்பி நம்மையும் குழப்பி விடுகிறார்.
அவரே "ரெண்டுலதான் ஒன்ன தொட வாரியா" என்று கேள்வி கேட்டு நமது BPயை ஏற்றி பின்
"கன்னம் ரெண்டுலத்தான் ஒன்ன தொட வாரியா" என்று விடை கொடுத்து BPயை normal ஆக்கிவிடுகிறார்.


இப்படி கவிஞர்கள் அனுபவப்பட்டு பாடல்கள் எழுதும் போது நாம் கேட்பதுடன் நிறுத்திக்கொள்ளாமல் கவிஞர் சொல்ல வருவதை அசை போட்டும் பாக்கலாம். அசை போடுங்கள், இதே போல காதல் கொப்பளிக்கும் பாடல்களை நீங்கள் கேட்டிருப்பின் எந்த ப்ளோகில் பதிவு செய்யுங்களேன், ஏனெனில் எனக்கு இப்பொழுது இவ்வளவே நியாபகத்தில் இருக்கிறது.

-- தவிடு

Tuesday, November 4, 2008

எங்கும் தமிழ் எதிலும் தமிழ்

"பங்கு சந்தை பற்றிய உங்கள் வினாக்களுக்கு நான் விடையளிக்க தயாராக இருக்கறேன். உங்கள் வினாக்களுடன் என்னை தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி ********, கைபேசி எண் *******, மின்னஞ்சல் முகவரி *****@****.com".

யாரும் குழம்ப வேண்டாம். சமீபத்தில் மக்கள் தொலைக்காட்சியில் பங்கு சந்தை பற்றிய நிகழ்ச்சியில் நான் கேட்டவையே இது.

விஷயத்துக்கு வருவோம் கைபேசி, மின்னஞ்சல், மகிழுந்து, குளுகுளுப்பான், மாவரைப்பான், இசை தகடு, கொட்டை வடி நீர் இதெல்லாம் என்ன? முறையே செல்போன், ஈமெயில், கார், பிரிட்ஜ், கிரைண்டர், மியூசிக் சிடி, காபி என்பதின் தமிழாக்கமே மேலே நாம் கண்ட வார்த்தைகள்.

வேடிக்கையை பாருங்களேன், இதில் ஆங்கில வார்த்தைகள் பாமரனுக்கும் புரிவது போல உள்ளது, ஆனால் அதன் தமிழாக்கமோ ஏதோ பாவலருக்கு மட்டுமே புரிவது போல உள்ளது. "ஏன் இந்த கொலை வெறி" என்று வடிவேலு தோரணையில் கேட்கத் தூண்டுகிறது. ஆங்கிலத்தை தமிழாக்குவதையே வேலையாக கொண்டிருப்பவர்களுக்கு சில விஷயங்களை கூற விழைகிறேன்.

அதற்கு முன் நான் கொடுக்கும் உறுதி மொழி "நான் தமிழுக்கு எதிரானவன் இல்லை. தமிழ் மீது குன்றாத பற்றும், மரியாதையும் கொண்டவன்" என்பதுதான். இதனால் தான் நான் தமிழில் இந்த கட்டுரையை வரைந்து கொண்டு இருக்கிறேன்.

கண்டுபிடிப்புகள் இரண்டு விதம் -
1, இருக்கும் விஷயத்தை கண்டுபிடித்தல் - ஆங்கிலத்தில் டிஸ்கவரி. உதாரணத்திற்கு மஞ்சளில் மருத்துவ குணம் உள்ளது, புவி ஈர்ப்பு விசை.
2, இல்லாத ஒன்றை புதிதாக கண்டுபிடித்தல் - ஆங்கிலத்தில் இன்வெண்ஷன். உதாரணத்திற்கு டெலிபோன், செல்போன், கம்ப்யூட்டர்.

இங்கிலீஷ் போல தமிழும் ஒரு வேடிக்கையான மொழிதான். இங்கே கண்டுபிடிப்புகளை பிரித்து பார்ப்பதில்லை. ரேடியோவும் கண்டுபிடிப்புதான், பிரியாணியும் கண்டுபிடிப்புதான், ஏன் ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோலும் கண்டுபிடிப்புதான். அதனால்தான் என்னமோ தமிழன் தான் கண்டுபிடிக்காததுக்கு கூட தமிழ் பெயர் வைக்க முயற்சிக்கிறான்.

என்னை பொறுத்த வரையில் டிஸ்கவரிக்கு தமிழில் பெயர் வைத்து கொள்ளலாம் ஆனால் இன்வெண்ஷன்க்கு தமிழ் பெயர் வைத்து அழைப்பதை தவிர்க்க வேண்டும். அதேபோல நமது கண்டு பிடிப்புகளை ஆங்கிலத்தில் அழைப்பதையும் நாம் தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கு நாம் எதாவது முதலில் கண்டு பிடிக்க வேண்டும் என்று நீங்கள் கூறுவது எனக்கு கேட்கிறது.

விஷயம் இவ்வளவுதான் உங்கள் பெயர் 'அன்புமணி' என்று வைத்துக்கொள்ளுங்கள், எனக்கு தாய் மொழி தெலுங்கு என்பதற்காக உங்களை நான் 'பிரேமலு கண்டாலோ' என்று கூப்பிட முடியாது. அதேபோல் ஆல்பர்ட்டை ஆளவந்தான் என்று நான் அழைக்க கூடாது. ஏனென்றால் அது ஒரு பெயர், அதேபோல்தான் டெலிபோனும், சைக்கிளும். ஒரு படைப்பாளியின் படைப்புக்கு நாம் தரும் மரியாதையே அவர் வைத்த பெயரை வைத்து அந்த படைப்பை அழைப்பதுதான்.

டிஸ்கவரிக்கு வருவோம். எல்லா டிஸ்கவரிக்கும் தமிழ் பெயர் சூட்ட முடியாது, அது ஒத்தும் வராது. சென்னையில் படிக்கும் சிறார்கள் gravitation force, keyboard, friction என்று படித்து கொண்டிருக்க அங்கே தமிழ் பள்ளியில் புவி ஈர்ப்பு விசை, விசை பலகை, உராய்வு என்று சொல்லி கொடுத்தால் அவர்களுக்கு குழப்பமே மிஞ்சும். எனென்றால் அவர்களும் ஒரு காலகட்டத்தில் அங்கில பள்ளி மாணவர்களுடம் போட்டி போட வேண்டியது வரும். என்னதான் அறிவாளிகளாக இருந்தாலும் அந்த காலகட்டத்தில் அவர்களுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை வருவதை தவிர்க்க முடியாது. நானும் ஒரு தமிழ் பள்ளியை சேர்ந்தவன் என்பதால் சொல்கிறேன். இது எனக்கு நடந்து உள்ளது.

ஆங்கிலம் ஒரு கலப்பு மொழி. பல மொழிகளில் இருந்து தழுவி வந்த மொழியாகும். தமிழ் ஒரு தொன்மையான மொழியாகும், இன்று செம்மொழி அந்தஸ்தும் அதற்கு உள்ளது. அதற்காக பார்க்கும் பொருட்களுக்கு எல்லாம் தமிழில் பெயர் வைக்க முடியாது. எப்படி டெலிபோன் தமிழுக்கு புது வார்த்தையோ அதே போல தொலைபேசியும் புது வார்த்தைதான். இதை நாம் கவனத்தில் வைத்து கொள்வது நன்று. ஆங்கில வார்த்தைகள் உபயோகிப்பதை தயவு செய்து ஒரு மொழி துரோகமாக பார்க்காதீர்கள்.

தமிழை அழிக்க முடியாது. குமுதமும், ஆனந்த விகடனும் முன்னைவிட அதிகமாக தான் விற்று வருகின்றன. மும்பை பதுமைகள் எல்லாம் தமிழ் சினிமாவில்தான் அதிகம் குழுமி இருக்கிறார்கள். ஜோதிகாகொட இப்போது தமிழ் பெண்தானே (சிரிக்க வேண்டாம் நான் சீரியசாகதான் சொல்கிறேன்). தமிழாக்கம் என்ற பெயரில் தமிழை கலப்படம் செய்ய படுவதை நாம் நிருத்திக்கொல்லலாம் என்பதே என் கருத்தாகும். நம்புங்கள் bus stand, railway station, auto, computer, laptop இவைகளெல்லாம் நாம் மிக சரளமாக பயன்படுத்தும் வார்த்தைகள். சும்மா பகட்டுக்காக தமிழ் வளர்கிறேன் பேர்வழி என்று இவற்றை தமிழாக்கம் ஏன் செய்வானேன்?

கொட்டை வடி நீர் - எனக்கு சிரிப்பு தான் வருகிறது. இதை கண்டு பிடித்து யாரோ? கேட்டு சொல்லுங்களேன்.

-- தவிடு

Monday, November 3, 2008

இளிச்ச வாய் தமிழன்

தற்போது தமிழ்நாட்டில் இருக்கும் பிரச்சினைகளுள், இருந்துட்டு போகட்டும் எக்ஸ்ட்ரா என்று அஜித்தையும் சேர்த்து விட்டு இருக்கிறார்கள்.

இது ஒன்றும் சரித்திர புகழ் வாய்ந்த விஷயம் இல்லை என்றாலும் இதில் உள்ள உள்குத்தை சிறிது அலசி பார்ப்பதில் தவறில்லை என்றே தோன்றுகிறது.

இந்த பிரச்சனைக்கு காரணம் குருவி ரசிகர்கள் தான் என்று அஜித் விசிறிகள் நினைக்க கூடும். உண்மை அதுவன்று. அஜித்தை போல ஒரு போட்டியாளர் விஜய்க்கும், விஜய் போல ஒரு போட்டியாளர் அஜித்துக்கும் இருப்பது இருவருக்கும் அவசியம். அவர்களால் தனித்து சூப்பர் ஸ்டாராக இருக்கு முடியாது என்பதை இரு பக்க ரசிகர்களும் புரிந்து வைத்து இருக்கிறார்கள். அப்படியென்றால் இதற்கு யார் காரணமாக இருக்க வேண்டும்?

இதற்கு பதில் தேடுவதற்கு முன் நாம் யோசிக்க வேண்டியது இதைத்தான், "நடிகர் சங்கம் மட்டும் இது போன்ற பிரச்சனைகளுக்கு கொடி பிடிப்பது ஏன்?" இவர்கள் நடத்தும் போராட்டங்கள் தமிழ் நாட்டை தாண்டி வெளியே தெரிய போவதில்லை. டில்லியிலுள்ள யாரும் "அடடே நடிகர் சங்கம் ஆர்பாட்டம்" என்று தொலை காட்சியை பார்க்க போவது இல்லை. இது நடிகர் சங்கத்துக்கு தெரியாதா? தெரியும், பின்பு ஏன் இப்படி நடந்து கொள்ள வேண்டும்? அவர்கள் விரும்புவதே தமிழ் நாட்டு மக்களின் கவனத்தை அடைவது தான். இதனால் அவர்களுக்கு என்ன பயன்? வேறு என்ன அரசியல் தான்.

சினிமா வரலாற்றை பாருங்கள். சிவாஜி கணேசன் தலைமையில் தான் இது போல முதல் கூட்டம் நடந்தது. அப்போழுது அவர் காங்கிரஸ் காட்சியில் இருந்தார். அதன் பின்பு விஜயகாந்த் காவிரி நீர் பிரச்சனைக்கு கொடி பிடித்து நாம் அறிந்ததே, அப்பொழுது அவர் தீவிர அரசியலில் ஈடு பட்டு கொண்டிருந்தார். இப்போது குதிரையின் கடிவாளம் சரத்குமார் கையில் உள்ளது. அவரும் அரசியலில் இருக்கிறார் என்பதை கவனத்தில் வைத்து கொள்ளவும்.

சிவாஜி காலத்தில் நான் சிறுவன் ஆகையால் அவருடைய நோக்கம் நான் அறியாதது. அதை பற்றி நான் பேசுவது சரியன்று. ஆனால் விஜய்காந்த் மற்றும் சரத்குமார் அவர்களின் நோக்கத்தை நான் கண்டிப்பாக பேசலாம். இவர்கள் இருவரும் நடிகர் சங்க தலைவர் பதவி வகித்ததே, நாளை தமிழ் நாட்டு அரசியலுக்கு அது உதவும் என்று தான். ஒரு நடிகர் சங்கத்தை தலைமை தாங்குவதன் மூலம் தமிழ் மக்களின் கவனத்தை ஈர்க்கலாம் என்பதை அவர்கள் அறிந்து வைத்து இருந்தார்கள்.

ஒரு சமூக பிரச்சனைக்கு நடிகர் சங்கம் குரல் கொடுத்தால், அதன் தலைவர் வெளிச்சத்திற்கு வந்து விடுவார். "அட நம்ப பிரச்சனைக்கு இவர் போராடுராரே" என்று எல்லோரும் அந்த தலைவரை ஒரு விடுவெள்ளியாக பார்க்க ஆரம்பிப்பார்கள்.இதுவே அரசியல் சாணக்யம்.

விஜயகாந்த் தலைமையில் இதைத்தான் செய்தார். இதனால் விஜயகாந்த்துக்கும் சரத்குமாருக்கும் முட்டிக்கொண்டது நாம் அறிந்ததே. விருதாச்சலத்தில் விஜயகாந்த் வெற்றி பெற்ற பிறகு தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்க்காகவே காத்திருந்த சரத்குமார் நடிகர் சங்க தலைவர் பதவியை பிடித்து கொண்டார். இப்போது அவர் வெளிச்சத்துக்கு வர முயற்சிக்கிறார்.

அதற்கு என்ன செய்ய வேண்டும், விஜய்காந்த் போல ஒரு சமுக பிரச்சனையை கையில் எடுத்துக்கொள்ள வேண்டும். எடுத்து கொண்டார் ஒகேநேகள் பிரச்னையை. சரி புது தலைவர் ஏதோ ஆசை படுகிறார் என்ற தோரணையில் பெரிய நடிகர்கள் கலந்து கொண்டனர். ஆனால் வந்தவர்கள் பலர் கூட்டத்தில் பேச மறுத்து விட்டார்கள், இதில் அஜித்தும் ஒருவர். இதனால் கடுப்பானார் சரத்குமார். நூறு நாள் ஓடும் என்று எதிர்பார்த்த படம், வெளிவந்த அன்றே அவர் படம் போல போட்டிக்குள் முடங்கியதை, போல இருந்தது அவருக்கு. அது மட்டும் இன்றி நடிகர்களில் பலருக்கு இது போல கூட்டத்தில் கலந்து கொள்வது பிடிக்க வில்லை என்ற கசப்பான உண்மையையும் அவர் விழுங்க வேண்டியிருந்தது.

அடுத்து அவர் கையில் இருக்கும் பெரிய அஸ்திரம் ஈழத் தமிழர் பிரச்சனை, இதற்க்கு உண்ணா விரதம் இருக்கலாம் என்று மாஸ்டர் பிளான் போட்டார் சரத், ஆனால் இது நடிகர்கள் மத்தியில் அதிருப்தியையே கொண்டு வந்ததே மிச்சம். இது போன்ற கூடங்களில் அரசியல் உள்நோக்கம் இருப்பதை பல நடிகர்கள் விரும்ப வில்லை. மக்கள் பிரச்சனையை சரத் தனக்கு சாதகமாக்கிக்கொள்ள நினைப்பதை பலர் புரிந்து வைத்திருந்தார்கள். அவர்களுள் அஜித்தும் ஒருவர். சரத்தை தவிர யார் தலைமை தாங்கி இருந்தாலும் இந்த அதிருப்தி நடிகர்களுள் எழுந்து இருக்காது, என்பதை சரத்தால் ஜீரநித்துகொள்ள முடியவில்லை.

அஜித் விளம்பர நிகழ்ச்சிகளிலும், அரசியல் சம்பந்தபட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதை பல வருடங்களாக தவிர்த்து வருகிறார். இதை அவரது கொள்கையாகவும் வைத்து கொண்டிருக்கிறார். நடிகர் சங்கம் நடத்தும் வெளி நாட்டு கலை நிகழ்ச்சிகளில் கூட அவர் 'தலை' காட்டுவதில்லை. ஒரு பெரிய தொகையை கொடுத்து விட்டு எஸ்கேப் ஆகி விடுவார். சரத்தின் அரசியல் நோக்கத்திற்கு தானும் மறைமுகமாக பயன் படுத்த படுவதை அவர் விரும்பவில்லை. நடிகர் சங்கத்தை பொறுத்த வரை அஜித் கண்டிப்பாக கலந்து கொள்ள போவதில்லை என்பதில் தெளிவாக இருந்தார்கள். அதனாலேயே அஜித்திடம் இதை பற்றி அவர்கள் பேசவே இல்லை.

இங்குதான் சரத்தும் அவரது ஆதரவாளர்களும் வேறு மாதிரி யோசித்தார்கள். இப்பேர்ப்பட்ட அஜித்தை கலந்து கொள்ள வைத்து, பேசவும் வைத்துவிட்டால்... அது சரத்துக்கு ஒரு நடிகர் சங்கத்தலைவனாக பெரிய வெற்றியாகும். யாராலும் அடக்க முடியாத காட்டு குதிரையை அடக்கியதற்கு சமம். அஜித்துக்கு செக் வைக்க முடிவு எடுக்க பட்டது. "உண்ணா விரதத்தில் அஜித் கலந்து கொள்ள போவதில்லை" என்று பரப்பி விட்டனர் நக்கீரன் மூலம். சரத் ஒரு காலத்தில் பத்திரிக்கையாளராக இருந்தது அவருக்கு கை கொடுத்து. அஜித்தின் பேரை மட்டும் பயன்படுத்தினால் மக்கள் நம்ப மாட்டார்கள் என்று அர்ஜுனையும் கோதாவில் இறக்கி விட்டுவிட்டனர். இளிச்ச வாயன் ஆயிற்றே தமிழன். நக்கீரன் போன்ற மூன்றாம் தர பத்திரிக்கையை நம்பி தொலைத்தான். யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது போல அஜித் பேரை சொல்லி காசு பார்த்து விட்டார் நக்கீரன்.

இப்படிப்பட்ட ஒரு விஷயத்தை மக்கள் நம்ப ஒரு விதத்தில் அஜித்தும் காரணம். ஒரு காலத்தில் அவர் கொடுத்த பேட்டிகள், வெளிப்படையான விளக்கங்களும் அவருக்கு Bad Boy image கொடுத்ததை மறுக்க முடியாது. இப்போது சாந்த சொருபமாக, முற்றிலும் மாறியவராக இருந்தாலும் "அஜித்தா அவர் சொல்லி இருப்பார்" என்று மக்கள் நம்பும் அளவிற்கு அவருடைய இறந்த காலம் அவரை தொடர்ந்தே வந்துள்ளது.

அஜித், அர்ஜுன் படங்களை திரையிட மாட்டோம் என்று ஓவர்சீஸ் திரையரங்கு உரிமையாளர்கள் போராட்டம் நடத்த அஜித் தனது கொள்கையை விட்டு கொடுக்கும் நிர்பந்தத்துக்கு ஆளானார். உண்ணா விருதத்திற்கு கலந்து கொள்ள சம்மதித்தார். ஆனால் அப்பொழுதும் அவர் பத்திரிக்கைகளில் மட்டுமே பேட்டி கொடுத்தார், அர்ஜுனைபோல தொலை காட்சிக்கு கொடுக்க வில்லை. இதனால் அஜித் கண்டிப்பாக கூட்டத்தில் பேச வேண்டும் என்று மீண்டும் செக் வைத்தார்கள், இதற்கும் அஜித் இணங்க வேண்டியதாகி விட்டது.

சரத் சாதித்து விட்டார். அடுத்து அஜித்துக்கு ஆதரவு தருவதுபோல அவரது கோடி கணக்கிலான ரசிகர்களை தன் பக்கம் இழுக்க முயற்சிப்பார் சரத். விஜய்க்கும் அஜித்துக்கும் சம அளவில்லான ரசிகர்கள் இருந்தாலும், அஜித்தின் ரசிகர்கள் எப்பொழுதுமே ஒரு படி மேல்தான். அஜித்தை போல தோல்வி படம் தந்தவர்கள் இப்பொழுது சினிமாவில் இல்லை. ஆனால் அஜித் இருக்கிறார், காரணம் அவருடைய ரசிகர்கள் அந்த அளவுக்கு ஆதரவு தருகிறார்கள்.

ஆனால் சரத்தின் இந்த உள்நோக்கத்திற்கு ஆப்பு வைப்பது போல இருந்தது அஜித்தின் பேச்சு, "சினிமாத்துறையை சினிமாவாக இருக்க விடுங்கள்" என்று அவர் கூறியது, சினிமாவை வைத்து அரசியல் ஆதாயம் தேடுபவர்களை எதிர்த்துதான். "மக்களுக்கு போராடுரேன்னு முதலை கண்ணீர் வடிக்காதிர்கள், முடிந்தால் அவர்களுக்கு உதவி செய்யுங்கள்" என்பதே அவர் கூற வந்தது. சம்பந்தபட்டவர்களுக்கு இது புரிந்திருக்க வேண்டும். அதனால் தான் என்னமோ அஜித்தை வைத்து திரும்பவும் பிரச்சனையை ஆரம்பித்து இருக்கிறார்கள்.

பில்லாவில் அஜித் சொன்ன வசனம் "சரித்திரத்தை ஒரு நிமிஷம் பாருங்க, அது நமக்கு கத்து கொடுத்தது ஒண்ணுதான். நாம வாழனும்னா யார வேணும்னாலும் கொல்லலாம்". அஜித்தின் வசனத்தை சரத் சற்று சீரியசாக எடுத்து கொண்டு விட்டார் போல...

-- புண்ணாக்கு